வதியும் விருந்தினர் திட்ட வீசா நிகழ்ச்சித்திட்டம்
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை வதிவிட வீசாவினை எவர் பெறலாம்?
வதிவிட விருந்தினர் திட்ட வீசா நிகழ்ச்சித்திட்டமானது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக, கலாசார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தொழில்வாண்மையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஊக்குவிப்புப் பொதியின் ஒரு பகுதியாகும்
அமுலாக்கும் முகவராண்மை என்றால் என்ன?
வதிவிட விருந்தினர் வீசா நிகழ்ச்சித்திட்டத்தின் அமுலாக்கல் முகவராண்மை என்பது அரசாங்க நிறுவனங்களின் சிரேஷ்ட அலுவலர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். அமுலாக்கும் முகவராண்மையின் அலுவலகம் இலங்கை, "சுகுறுபாய", பத்தரமுல்லை இல் உள்ள குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தில் அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை வீசாவுக்காக எவ்வாறு விண்ணப்பிப்பது?
வதியும் விருந்தினர் திட்டத்தின் கதவுகள் வெளிநாட்டவர் அனைவருக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் சமூக, கலாசார அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்யக்கூடிய எந்தவொரு முதலீட்டாளரும் / தொழில்வாண்மையாளரும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
வதியும் வீசா விண்ணப்பப் பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?
- அமுலாக்கும் முகவராண்மை அலுவலகத்திடமிருந்து (இலங்கை குடிவரவு - குடியகல்வு தலைமையகம்)
- www.immigration.gov.lk இல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
வதியும் வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
- விண்ணதாரியில் தங்கிவாழ்வோரது விபரங்கள் அடங்கிய கடவுச்சீட்டுப் (அல்லது பயண ஆவணங்களின்) பக்கங்களின் நிழற் பிரதிகள்.
- (ஏற்புடையதாயின்) விவாகச் சான்றிதழின் அல்லது விவாக ஒப்பந்தத்தின் நிழற் பிரதி.
- ஆறு நிழற்படங்கள் (6 செ.மீ. ஒ 5 செ.மீ.)
- கல்வி, தொழிற்றகைமைகள் மற்றும் அனுபவம் தொடர்பான விபரங்கள் (இருப்பின்) வெவ்வேறாக நான்கு பிரதிகளைக் கொண்டதாக சமர்ப்பிக்கவும்.
வெற்றிகரகமான விண்ணப்பதாரிகள் மருத்துவப் பரிசோதனைக்கு தோற்றி மருத்துவச் சான்றிழைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எனக்கு வீசா கிடைத்தால் எனது குடும்ப அங்கத்தவர்களையும் நான் வரும்போது அழைத்துவர முடியுமா?
இயலும். நீங்கள் தகைமைபெற்ற முதலீட்டாளராக அல்லது தொழில்வாண்மையாளராக இருப்பின் உங்கள் வாழ்க்கைத்துணை, தங்கிவாழும் பிள்ளைகள், உங்களின் பெற்றோர்கள், உங்கள் வாழ்க்கைத்துணையின் பெற்றோர்கள் ஆகியோரை அழைத்துவரலாம்.
எடுத்துவரக்கூடிய பணத்திற்கான வரையறை யாது?
முதலீட்டு வகையினம்
இத்திட்டத்தின் கீழ் இந்நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளரொருவர் குறைந்த பட்சம் 250,000 அமெரிக்க டொலர் அல்லது மாற்றக்கூடிய அத்தொகைக்கு இணையான வெளிநாட்டு பணத்தைக் கொண்டுவந்து இலங்கை மத்திய வங்கி அங்கீகரித்துள்ள எந்தவொரு வணிக வங்கியிலும் விசேட கணக்கொன்றில் வைப்புச் செய்தல் வேண்டும். வேறொரு வெளிநாட்டுத் தரப்பினருடன் அல்லது தரப்பினர்களுடன் இணைந்து ஏதேனும் முதலீட்டுக் கருத்திட்டத்தை ஆரம்பிக்க முதலீட்டாளர் எதிர்பார்ப்பின் அத்தகைய ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 250,000 அமெரிக்க டொலர்களை அல்லது மாற்றக்கூடிய அத்தொகைக்கு இணையான வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவந்து முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டாளருடன் வருகை தருகின்ற ஒவ்வொரு தங்கிவாழ்பவர் தொடர்பாகவும் 35,000 அமெரிக்க டொலர்கள் வீதம் மேலதிக பணத்தொகையை முதலீடு செய்தல் வேண்டும். பாவனைக்கு எடுக்காமல் எஞ்சியுள்ள வைப்புத் தொகைக்காக காலத்திற்குக் காலம் இலங்கை மத்திய வங்கி தீர்மானித்த அளவிலான வட்டி செலுத்தப்படும். இலங்கைக்கு பணம் அனுப்பிவைக்கப்பட்டமையை உறுதிப்படுத்துகின்ற எழுத்திலான சான்றுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
ஆரம்ப முதலீட்டுக்கு மேலதிகமாக முதலீட்டாளர் தனதும் தன்னில் தங்கிவாழ்வோரும் வாழ்க்கைக்குப் போதுமான அளவு நிதியங்களைக் கொண்டுவர வேண்டும்.
தொழில்வாண்மை வகையினம்
இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் வதியக் கருதியுள்ள தொழில்வாண்மையாளர் குறைந்த பட்சம் 2,000 அமெரிக்க டொலர்களையும் தன்னில் தங்கிவாழ்வோருக்காக ஒருவருக்கு 1,000 அமெரிக்க டொலர்கள் வீதமும் மாதந்தோறும் வாழ்க்கைச் செலவுக்காக இலங்கையில் விசேட வங்கிக் கணக்கொன்றில் வைப்புச் செய்தல் வேண்டும்.
முதலீடு
எவரேனும் வெளிநாட்டு முதலீட்டாளரால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற நிதியங்கள் ஏதேனும் கருத்திட்டத்தில் முதலீடு செய்யப்படல் வேண்டும். இலங்கையில் வதியும் முதல் இரண்டு வருடங்களில் இந்நாட்டில் முதலீடு செய்தல் தொடர்பில் திருப்திகரமான முன்னேற்றத்தை வெளிக்காட்டாவிட்டால் அந்த முதலீட்டாளரது விசேட கணக்கில் நிலவும் வரவு மீதிக்காக தொடர்ந்தும் வட்டி செலுத்தப்படுவதை நிறுத்திவிட அமுலாக்கும் முகவராண்மையால் இயலும்.
இத்திட்டத்தின் பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்களாவன,
- முதலீட்டுச் சபையினால் (BOI - web link) அல்லது ஏற்புடைய அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடு கொண்ட புதிய தொழில் முயற்சிகள்.
- ஏற்புடைய அதிகாரசபையின் அங்கீகாரத்திற்கு கட்டுப்பட்டதாக தற்போது நிலவுகின்ற அல்லது புதிதாக அரம்பிக்கப்படுகின்ற கம்பெனிகள்.
- கொழும்பு பங்குச் சந்தையில் குறிப்பிடப்பட்டுள்ள பங்குகள் (CSE - web. link) அத்தகைய முதலீடுகளை இனங்கண்டு அவற்றில் முதலீடு செய்வதற்கான சகலவிதமான உதவிகளையும் இலங்கை முதலீட்டுச் சபை வழங்கும்.
விசேட கணக்குகள்
கீழே விபரிக்கப்பட்டுள்ளவாறு இலங்கையின் எந்தவொரு வணிக வங்கியிலும் தனித்தனியாக இரண்டு விசேட கணக்குகளை ஆரம்பிக்க இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
1. வதியும் விருந்தினர் வெளிநாட்டு நாணயக் கணக்கு
- (அ) இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கருத்திட்டத்திலும் முதலீடு செய்வதற்காக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுகின்ற பணம் இக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
- கணக்கில் உள்ள பாவிக்கப்படாத மீதிக்காக முதலிரண்டு நிதியாண்டுகளுக்காக வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குடன் தொடர்புடைய வட்டி அளவுக்கு மேற்படாத வட்டி வங்கியினால் செலுத்தப்படும். இரண்டு வருடங்களின் பின்னரான வட்டி செலுத்தப்படுதலானது அமுலாக்கும் முகவராண்மையின் அங்கீகாரத்திற்குக் கட்டுப்பட்டதாகும்.
- முதலீடு தவிர்ந்த வேறு கருமங்களுக்காக கணக்கிலிருந்து பணத்தை மீளப்பெற வேண்டுமாயின் அது அமுலாக்கும் முகவராண்மையால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
- இக்கணக்கு மீதியின் பேரில் செலுத்தப்படும் வட்டி வதியும் விருந்தினர் ரூபா நடைமுறைக் கணக்கிற்கு மாற்றப்படல் வேண்டும்.
2. வதியும் விருந்தினர் ரூபா நாணயக் கணக்கு
- இலங்கையில் வசிப்பதற்காக அனுப்பிவைக்கப்படும் பணம், முதலீடுகள் மூலமாக பெறப்படுகின்ற வருமானம், பங்குகள் விற்கப்படுவதன் மூலமாக பெறப்படும் பணம் போன்றவை இக்கணக்கில் வரவுவைக்கப்பட அனுமதி வழங்கப்படும்.
- இக்கணக்கிலிருந்து பணத்தை வெளியில் அனுப்புதல் செலாவணிக் கட்டுப்பாட்டாளரது அங்கீகாரத்திற்குக் கட்டுப்பட்டதாகும்
மூலதன வருமானத்தை தாயகத்திற்கு திருப்பி அனுப்புதல்
தற்போது அமுலில் உள்ள செலாவணிக் கட்டுப்பாடு மற்றும் வரி ஒழுங்குவிதிகளுக்கு கட்டுப்பட்டதாக கீழே குறிப்பிடப்பட்ட வெளிவாரி செலுத்துதல்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
- முதலீட்டாளரின் விசேட கணக்குகளில் உள்ள பாவனைக்கு எடுக்காத பணம்
- முதலீடுகளிலிருந்து பெறப்படுகின்ற வருமானமும் மூலதன இலாபங்களும்
- முதலீடுகளின் விற்பனையிலான பெறுகைகள்
எனது வதியும் விருந்தினர் திட்டம் தொடர்பான கட்டணங்கள் யாவை?
வதியும் வீசா கட்டணத்திற்கும் வரித் தொகைகளுக்கும் மேலதிகமாக 250 டொலர்கள் அல்லது அதற்கு இணையான மாற்றக்கூடிய நாணயத்தை அமுலாக்கும் முகவராண்மைக்குச் செலுத்த வேண்டும்.
வீசா கட்டணம் தொடர்பான விபரங்களுக்காக
இங்கே சுடக்குக.
வதியும் விருந்தினர்களின் பொறுப்புக்கள்
வதியும் விருந்தினர்களால் பின்வரும் கருமங்கள் ஈடேற்றப்படல் வேண்டும்.
- விண்ணப்பப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அத்தகைய மாற்றம் ஏற்பட்டு இரண்டு (2) மாதங்களுக்குள் அதுபற்றி அமுலாக்கும் முகவராண்மைக்கு அறிவித்தல் வேண்டும்.
- இலங்கை அரசாங்கத்தின் குடிவரவு - குடியகல்வு ஏற்பாடுகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
- இலங்கையின் வரிச் சட்டங்களைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
- இலங்கை அரசாங்கத்தின் பிற சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் அனைத்தையும் கடைப்பிடித்தல் வேண்டும்.
- மக்கள் நலனுக்கு பங்கமேற்படுகின்ற அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு சேதமேற்படுத்தக்கூடிய அரசியல் மற்றும் பிற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
- நல்லொழுக்கம் மிக்கவராக விளங்கியமைக்கான இசைவுச் சான்றிதழை பொலிஸாரிடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.
வதியும் விருந்தினர் தனது முதலீட்டுக் கருத்திட்டத்தை / தொழில்வாண்மை சேவையினை முடிவுறுத்தும் போது கீழே குறிப்பிட்டவாறு செயலாற்ற வேண்டும்.
- தனது முதலீட்டுக் கருத்திட்டத்தை / தொழில்வாண்மை சேவையை முடிவுறுத்தக் கருதியுள்ளமை பற்றி இரண்டு (2) மாதங்களுக்கு முன்னராக எழுத்தில் அமுலாக்கும் முகவராண்மைக்கு அறிவித்தல் வேண்டும்.
- தனது முதலீட்டுக் கருத்திட்டத்தை / தொழில்வாண்மை சேவையை முடிவுறுத்தி தான் நாட்டைவிட்டு வெளியேற குறைந்த பட்சம் பதினான்கு (14) வேலை நாட்களுக்கு முன்னராகவேனும் எழுத்தில் அறிவிக்க வேண்டும்.
வதியும் விருந்தினர் வீசா பெறுவதற்கான தகைமைகள் யாவை?
வதியும் விருந்தினர் வீசா திட்டம் வெளிநாட்டவர் அனைவருக்குமே திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக, கலாசார அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்யக்கூடிய எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் / தொழில்வாண்மையாளரும் இத்திட்டத்தின் கீழ் வீசா கோரலாம்.
நான் வதியும் விருந்தினர் திட்டத்திற்கான வீசா விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?
- கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத் தலைமையகத்திடமிருந்து
- விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்க.
வதியும் விருந்தினர் திட்ட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?
நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் இலங்கைத் தூதரகமொன்று கிடையாது. அப்படியானால் நான் என்ன செய்வது?
உங்களுக்காக இலங்கையில் உள்ள (நண்பர், உறவினர் அல்லது பயண முகவர்) எவரையேனும் கொண்டு அதனைச் செய்விக்கவும்.
எனது வதியும் விருந்தினர் திட்ட வீசா அனுமதிப் பத்திரத்தின் உச்சமட்ட செல்லுபடியாகும் காலம் யாது?
உங்கள் வதியும் விருந்தினர் திட்ட வீசா ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
வதியும் விருந்தினர் திட்ட வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்?
வதியும் விருந்தினர் திட்ட வீசா நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரங்கள் அனைத்தையும் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத் தலைமையகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்த பின்னர் வீசா அனுமதிப்பத்திரத்தை நீடிக்கும் பொருட்டு விண்ணப்பித்தவிடத்து கருத்திட்டங்களில் முதலீடு செய்தல் / வங்கிக் கூற்றுகள் போன்ற ஆவணங்களை அவ்விடயங்களை நிரூபிக்கும் பொருட்டு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.
வரி செலுத்துப்பட்டுள்ளமைக்கான உண்ணாட்டரசிறைத் திணைக்களத்திமிருந்து பெறப்பட்ட ஆவணச் சான்றுகளையும் வரிவிலக்கு அளிக்கப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பாக முதலீட்டுச் சபையிடமிருந்து வழங்கப்பட்ட விதப்புரைகளையும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
வதியும் விருந்தினர் வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெறலாம்?
- கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள தலைமையகத்திடமிருந்து
- கண்டி, மாத்தறை, அநுராதபுரம் பிராந்திய அலுவலகங்களிலிருந்து
- விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
எனது வதியும் விருந்தினர் வீசா திட்டத்துடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை?
உங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதும் காலம் முடிவடைதல் வேண்டும்.
அமைப்பு பற்றிய தகவல்குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
“சுகுறுபாயா”, ஶ்ரீ சுபூத்திபுர வீதி, பத்தரமுல்லை. திரு. எச். எம். ஐ. கே. ஹேரத் தொலைபேசி:+94-11-2101500 தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2885358 மின்னஞ்சல்:controller@immigration.gov.lk இணையத்தளம்: www.immigration.gov.lk
|